01. மலையக மக்களின் கல்வியறிவை மேம்படுத்துவதுடன் அரசியல், சமுதாய விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தி மலையக தமிழர்களின் கலை, கலாசார விழுமியங்களை பாதுகாப்பதுடன் கல்வி, மருத்துவம், விளையாட்டு, பண்பாடு, விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என சகல துறைகளிலும் வளர்ச்சியடைந்த - உச்ச பட்ச அபிவிருத்தியடைந்த மலையகத்தை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு கையளித்தல்.
02. தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்.
03. சிகரம் ஊடகத்துறையினூடாக எவ்விதமான பக்கச்சார்புமின்றியும் அச்சமுமின்றியும் நீதித்தன்மையுடன் உடனுக்குடன் உண்மையானதும் தெளிவானதும் உறுதியானதுமான செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தல். மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றுக்கு உடன் தீர்வு காணுதல். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கபடுவதோடு சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் நிறுவனம் குரல் கொடுக்கும்.
04. தமிழ்க் கருத்தரங்குகளை தினசரி, வாராந்தம், மாதாந்தம் என உரிய கால அளவுகளில் நடத்துதலும் வருடாந்த மாநாடுகளை உலக அளவில் ஒழுங்கு செய்து நடத்துதல் மற்றும் உலக அளவில் இடம்பெறும் இவ்வாறான ஏனைய நிகழ்ச்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குதலும் மற்றும் தமிழ்க் கலை, இலக்கிய நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குதல் மற்றும் ஆவணப்படுத்தலும்
05. தாய்மொழி வழிக் கல்வி தொடர்பிலான அவசியத்தை மக்களுக்கு உணர்த்துதல் மற்றும் தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் தமிழில் தாய்மொழி வழிக் கல்விக்கான வளங்களை மாணாக்கர்கள் பெற்றுக்கொள்ள ஆவண செய்தல்.
06. தமிழ்ப் படைப்பாளிகளை உரிய முறையில் இனங்கண்டு அவர்களின் படைப்புகளை உலகறியச் செய்தலும் திறமையான படைப்பாளிகளை ஊக்குவித்தலும் நலிந்த பொருளாதாரம் கொண்ட படைப்பாளிகளுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பை வழங்குதலும் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை உரிய முறையில் ஆவணப்படுத்துதலும்.
07. உலகின் மிகப் பெரிய எண்ணிம நூலகம் மற்றும் ஆவணக்காப்பகத்தை உருவாக்குதல். இதற்காக ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்களை இணைத்துக் கொள்ளல் அல்லது அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல். மேலும் மின்னூல் மற்றும் மின்னிதழ் வெளியீட்டை தமிழில் ஊக்கப்படுத்தல். தற்கால படைப்பாளிகளின் படைப்புகளை அவர்களின் அனுமதியுடன் மின்னூலாக்கம் செய்தல். நமது எண்ணிம நூலகத்தின் வாயிலாக கட்டணத்துடன் அல்லது கட்டணமின்றி அவற்றை படிக்கும் வசதியை மக்களுக்கு வழங்குதல்.
08. வெளியிடப்படும் நூல் சார்ந்த அல்லது அச்சு சார்ந்த துறையில் (பத்திரிகைகள், புத்தகங்கள்) தகவல் சேகரிப்பு, அச்சிடல், வெளியிடல் என்பவற்றில் முறையான தரத்தை பேணுதலும் எண்ணிம வடிவிலான வெளியீடுகள் மற்றும் ஆவணப்படுத்தல் தொடர்பில் முறையான தரக்கொள்கையைப் பின்பற்றுதலும்.
No comments:
Post a Comment